No icon

Vatican News

தன்னலத்தால் உருவாகும் புறக்கணிப்பு” கிருமி குறித்து  திருத்தந்தை எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் நெருக்கடிக்குப்பின், மனித சமுதாயம், அக்கிருமியைவிடவும் மோசமானதொரு கிருமியால், அதாவது “தன்னலத்தால் உருவாகும் புறக்கணிப்பு” என்ற கிருமியால் தாக்கப்படக்கூடும் என்று,  ஏப்ரல் 19 அன்று ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரித்தார்.

இறை இரக்க விழாவான, ஏப்ரல் 19, ஞாயிறு உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, உரோம் நகரின் சாந்தோ ஸ்பிரித்தோ இன் சாசியா Santo Spirito in Sassia ) இறை இரக்க திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் முடிவுறும் நாள்களை ஆவலோடு எதிர்நோக்கியுள்ள நாம், ஏழைகளை மறந்துவிடும் ஆபத்தும் உள்ளது என்று கூறினார்.

சீடர்களின் உயிர்ப்பு

கடந்த ஞாயிறு, நாம் ஆண்டவரின் உயிர்ப்பைக் கொண்டாடினோம், இன்று, அவரின் சீடர்களின் உயிர்ப்புக்கு, சாட்சியம் பகர்கின்றோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையைத் துவக்கினார்.

இயேசு உயிர்த்தெழுந்து ஒரு வாரம் ஆகியும், சீடர்கள் அச்சத்துடன், பூட்டிய கதவுகளுக்குள் தங்களை முடக்கியிருந்தனர், ஆனால் இயேசு, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என, அவர்களின் அச்சத்திற்குப் பதில்மொழிந்தார் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, இயேசுவின் சீடர்களின் உயிர்ப்பு, பொறுமையுடன்கூடிய இரக்கம் மற்றும் விசுவாசத்தோடு துவங்குகிறது என்று கூறினார்.

நாம் வாழ்வில் வீழ்கையில் நம்மை எழுப்பிவிடுவதற்கு கடவுள் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதையும், நாம் வீழ்ந்துவிடும் ஒவ்வொரு நேரமும், ஒரு தந்தையைப்போல, அவர், தற்காலிக அடியெடுத்து வைக்க நம்மை அனுமதிக்கிறார் மற்றும், நம்மைத் தூக்கி விடுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நாம் வீழ்கையில் நம்மைத் தூக்கிவிடும் அந்தக் கரமே இரக்கம் என்றும், நாம் தொடர்ந்து வீழ்வோம் என்பதை கடவுள் அறிந்திருக்கிறார், ஆயினும், தோல்விகளையே நாம் நோக்காமல், அவரை நோக்கவேண்டுமென அவர் விரும்புவதால், அவர் எப்போதும் நம்மைத் தூக்கி விடுகிறார் என்று, திருத்தந்தை கூறினார்.

தோமா உயிர்பெற்றெழுந்தார்

இயேசுவைக் கைநெகிழ்ந்த எல்லாச் சீடர்களும் குற்ற உணர்வைக் கொண்டிருந்தனர், இவர்களுக்கு நீண்ட போதகம் ஆற்றுவதை விட்டு விட்டு, அவர்களுக்கு, அவர் தம் காயங்களைக் காட்டினார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு காட்சியளித்தபோது அவ்விடத்தில் முதலில் இல்லாத தோமா, அவரின் உயிர்ப்பில் மட்டுமல்ல, கடவுளின் எல்லையற்ற அன்பிலும் நம்பிக்கை கொண்டார் என்று விளக்கினார்.

தோமாவின் காயப்பட்ட மனிதம், இயேசுவின் காயங்களுள் நுழைந்தபோது, அவர் இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தார் எனவும், கடவுள், ஒவ்வொருவரின் கடவுளாக மாறுகையில், நம்மை ஏற்றுக்கொள்ளவும், வாழ்வை அது இருப்பது போலவே ஏற்கவும்  துவங்குகிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

நம் பலவீனத்தில், அழகான, உடையக்கூடிய, அதேநேரம் விலைமதிப்பற்ற கற்களாக,  ஆண்டவருக்கு, நாம் எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்பதை, தோமா புரிந்துகொள்ள வைக்கிறார், நாம் பளிச்சிடும் பளிங்குக்கல்லாக இருந்தால், இயேசுவின் இரக்கம் நம்மிலும், நம் வழியாக உலகிலும் சுடர்விடும் என்றும், திருத்தந்தை கூறினார்.

தோமா இயேசுவுக்காகக் காத்திருந்ததுபோல, இந்த ஒளியானது, மற்ற மக்களுக்காக நாம் காத்திருக்க உதவும் மரையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அகில உலகும் கோவிட்-19லிருந்து விடுபடும்போது, எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

Comment